பாடசாலைக்கு வராத இரண்டாம் தர மாணவிக்கு அதிபர் கொடூரத் தண்டனை
ஆனமடுவ, கெதேத்தேவ பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 2ஆம் ஆண்டு மாணவிக்கு அதிபர் ஒருவர் மரக் குச்சியால் தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் குறித்த விபரம்:
முந்தைய நாள் பாடசாலைக்குச் சமுகமளிக்காததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த மரக் குச்சியை எடுத்துச் சிறுமியைப் பலமுறை தாக்கியதாக அறியமுடிகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானவர் கெதேத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஆவார்.
அதிபரின் இந்தச் செயல் குறித்து அவரது பெற்றோர் ஆனமடுவப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து, தாக்குதல் நடத்திய அதிபர் குறித்துப் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர். ஆனமடுவப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





