நல்லூர் பிரதேச சபைக்கு எழுந்த எதிர்ப்பு: அரியாலையில் 8 பேர் அதிரடி கைது
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கழிவுகளைக் கொட்ட வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி அடாவடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 8 பேர் யாழ்ப்பாண காவல்துறையினரால் இன்று (அக்டோபர் 9) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரியாலை மக்கள் நேற்று (அக்டோபர் 8) போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (அக்டோபர் 9) நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனத்தில் குறித்த இடத்திற்குக் கழிவுகளைக் கொண்டு வந்தபோது, அப்பகுதியில் கூடிய மக்கள் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மக்களிடம் பேசி இந்த முறை வாகனத்தை அனுமதிக்கக் கோரியதையடுத்து மக்கள் அனுமதித்துள்ளனர்.
தனியார் வாகனத்தைக் குறிவைத்ததில் கைது
இதனைத் தொடர்ந்து, யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிடம் (Hotel) ஒன்றின் ஊழியர்கள், அப்பகுதியில் உள்ள தமது சொந்தக் காணி ஒன்றில் கழிவுகளைக் கொண்டு வந்தபோது, மக்கள் அந்தக் கழிவு வாகனத்தையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அங்கு அடாவடியில் ஈடுபட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அங்கிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் குற்றச்சாட்டு
அரியாலையைப் குப்பை மேடாக்கும் முயற்சியைத் தடுக்கப் போராடியவர்களைக் காவல்துறையினர் பொய்க் குற்றம் சாட்டி கைது செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





