சுவிட்சர்லாந்து தூதுவரிடம் சஜித் பிரேமதாசவின் கோரிக்கை
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்டுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கொழும்பில் விசேட சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் சஜித் பிரேமதாச, சுவிட்சர்லாந்து போல இந்நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து அரசின் அதிகபட்ச உதவி கோரியுள்ளார்.
கடந்த வார இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டுமென தானும், அவரது குழுவும் அரசுக்கு தொடர்ந்து பரிந்துரைகளை வழங்கியதாக கூறினார்.
எனவே, மின்வெட்டு நீங்க, மக்கள் எப்போதும் மின்சாரம் பெற இடைவிடாத உறுதி பெற, அரசாங்கம் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுவிட்சர்லாந்து தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.