பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையினால், நாடு முழுவதும், எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுடன் பொதுமக்கள் குவிந்தனர்.
இதனால் பெரும்பாலான இடங்களில் மீண்டும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடுத்த மூன்று வாரங்களுக்கு கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்றும், அறிவித்திருந்தார்.
இதையடுத்து, மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக, பொதுமக்கள் மத்தியில் தகவல்கள் பரவின.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை எனக் கூறி மூடப்பட்டிருந்தன.
ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்பட்டன.
நாட்டின் பிற பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மக்கள் முற்றுகையிட்டனர்.
இதனால் பெரும்பாலான இடங்களில் எரிபொருள் தீர்ந்து, நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைத்து வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் உரை மீண்டும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.