இந்தியத் தூதுவருடன் சுமந்திரன் தனியாகச் சந்திப்பு: அரசியல் நிலவரம் குறித்து பேச்சு
இலங்கைத் தமிழ்த் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை நேற்று முன்தினம் (அக்டோபர் 7) கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் தனியாகச் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் வடக்கு கிழக்கில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் நிலை குறித்து இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சந்திப்பு
இதேவேளை, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேற்று முன்தினம் (அக்டோபர் 7) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் மலையகப் பகுதிகளில் இந்திய வீட்டுவசதித் திட்டம், இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் கடன் உதவி, காங்கேசன்துறை – நாகப்பட்டினம் மற்றும் கொழும்பு–தூத்துக்குடி இடையே எதிர்பார்க்கப்படும் படகு சேவைகள் போன்ற முக்கிய விடயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.






