தையிட்டி மற்றும் காணி விடுவிப்பு விவகாரம்: ஜனாதிபதி அநுர வடக்கிற்கு விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கின் எரியும் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதன்போதே தனது விஜயம் குறித்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டார்.
தையிட்டி பகுதியில் விகாரை அமைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை மற்றும் அங்குள்ள மக்களின் எதிர்ப்பு குறித்து ஜனாதிபதி நேரில் ஆராயவுள்ளார்.
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது மற்றும் மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பது தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயம், வடக்கு மக்களின் காணி உரிமை மற்றும் வழிபாட்டு உரிமை தொடர்பான விவகாரங்களில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





