தைப்பூசம் 2025 இல் எப்போது தைப்பூசம் வருகிறது?
தைப்பூசம் 2025: தமிழ் கடவுளான முருகன், அசுரர்களை அழிக்க அன்னையிடம் வீரவேல் வாங்கி, கையில் ஏந்திய நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில், பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூசமாக விரிவாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் பெளர்ணமி நாளில் விழாவாக நடைபெறும்.
இந்த ஆண்டில் தைப்பூசம் 2025 பிப்ரவரி 11 (தை மாதம் 29ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திரம் பிப்ரவரி 10, திங்கள் கிழமை மாலை 6:00 மணிக்கு ஆரம்பமாகி, பிப்ரவரி 11, மாலை 6:33 மணிக்கு முடிவடைகிறது.
தைப்பூசம் நாளில் செய்யவேண்டிய பூஜைமுறைகள்
தைப்பூசம் நாளில் காலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து குளித்து, திருநீறு அணிந்து, வீடிலுள்ள தெய்வங்களை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
முருகப்பெருமானை வழிபட்டு, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த, கலிவெண்பா போன்ற பாடல்களை காலை முதல் மாலை வரை பாடலாம்.
அதிகாலை எழுந்து குளித்து, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாடல்களை பாராயணம் செய்யலாம். உணவின்றி 3 வேளைகளிலும் பால் மற்றும் பழங்களை மட்டும் உண்ணலாம். மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை முடிக்கலாம்.
தைப்பூசம், சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் மிக முக்கியமானது. பூச நட்சத்திரத்தின் அதி தேவதையான குருபகவான் இன்றும் சிறப்பாக வழிபடப்படுகின்றார். தைப்பூசம் அன்று அனைத்து முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
உலகின் தோற்றம்
தைப்பூசம் நாளில் தான் உலகின் முதன்மை உயிர் சக்தியான தண்ணீர் சிவபெருமானால் உருவாகியது. பின்னர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகியவற்றையும், பிற உயிரினங்களையும் இறுதியாக உருவாக்கப்பட்டன.
அம்பாளும் தைப்பூசமும்
மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் சிவபெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடினார். இந்நிகழ்ச்சி சிதம்பரத்தில் பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு அரங்கேற்றப்பட்டது. அதனையும் பார்வதி அம்மையும் ரசித்து, அந்த தாண்டவத்தை செய்ய விரும்பினார். அதே நேரத்தில், பிரம்மா, விஷ்ணு மற்றும் பிற தேவா முனிவர்கள் அம்பாளின் நடனத்தை காண ஆர்வமாக இருந்தனர்.
இந்த காரணத்தால், அம்பிகை ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் தைப்பூசம் என பெயரிடப்பட்டது. சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தின் நிகழ்ச்சி திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய நாள் தைப்பூசமாக மாறியது. எனவே இந்த நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய தினமாகக் கருதப்படுகிறது.