வடகிழக்கில் இராணுவமே போதைப்பொருளைப் பரப்புகிறது!’ – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!
வடகிழக்குப் பிரதேசங்களில் போதைப்பொருளைப் பரப்புவதில் இராணுவத்தினருக்குப் பெரும் பங்கு உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று வியாழக்கிழமை (ஒக்டோபர் 23) நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
“யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பூச்சிய நிலையில் இருந்தது. அவர்கள் மக்களைப் பாதுகாக்க விரும்பியதால் இது சாத்தியமானது.”
“போர் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே வடக்கில் பாரியளவில் போதைப்பொருள் பரவல் தொடங்கியுள்ளது. இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.”
“விடுதலைப்புலிகளின் புரட்சியைத் தோற்கடிப்பதற்கு இராணுவத்தின் ஊடாகப் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் என்ற புற்றுநோய் இன்று தெற்கு வரை பரவியுள்ளது,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக விரோதிகளுக்கு இராணுவ முகாம் அடைக்கலம்:
தற்போது சில பகுதிகளில் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக இராணுவ முகாம் மாறியுள்ளது என்றும், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளைக் காவல் நிலையங்கள் ஏற்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“போதைப்பொருள் பரவலில் இராணுவத்துக்கு உள்ள தொடர்பு குறித்துத் தேடிப்பார்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் கோரிக்கையும்:
“அரசாங்கம் எடுக்கும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு எங்களால் பூரண ஆதரவு வழங்கப்படும். எனினும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதாயின், இந்தச் செயற்பாட்டில் இருந்து இராணுவத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும்.”
“நிபுணத்துவம் பெற்றவர்களை மாத்திரம் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தினால் மாத்திரமே போதைப்பொருள் ஒழிப்பு என்பது சாத்தியப்படும். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மாறாக போதைப்பொருளை விற்பவர்களே தண்டிக்கப்பட வேண்டும்,” என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும், காவல்துறை, கல்வி, சுகாதாரம் போன்ற சமூகத்துக்கு மிகவும் தேவைப்படும் விடயங்களை அந்தந்த மக்களிடமே விட வேண்டும் என்றும், அப்போதுதான் தங்களது மக்களுக்குத் தாம் பொறுப்பானவர்கள் என்ற உணர்வு ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





