வடக்கில் எரிபொருள் விநியோகம் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட இடங்களில் எரிபொருள் விநியோகம் சீராக இடம்பெறவில்லை.
இதனால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டும், குறைந்தளவு பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
இதனைப் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் காத்திருக்க வேண்டியிருந்தது.
வவுனியாவில் 7 கிலோ மீற்றர் நீளத்துக்கும், யாழ்ப்பாணத்தில் 3 கிலோ மீற்றர் நீளத்துக்கும் வாகனங்கள் வரிசையில் காணப்பட்டன.
இந்த நிலையில், திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகாலையில் இருந்து காத்திருந்தவர்களுக்கு பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போது குழப்ப நிலை ஏற்பட்டது.
இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியதுடன், நேற்று நள்ளிரவை அண்மித்தும் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.
அதேவேளை, பருத்தித்துறை புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில், அதிகாலை முதல் மக்கள் எரிபொருளுக்காக காத்திருந்தனர்.
மதியத்திற்கு பின்னரே, எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.
மின்துண்டிப்பை காரணம் காட்டியும், கடமை நேரம் முடிந்து விட்டதாகவும் கூறியும் எரிபொருள் விநியோகக்கத்தை ஊழியர்கள் இடைநிறுத்தியதால் அதிருப்தியடைந்த மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்ட அதேவேளை, குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
கிளிநொச்சியில் எரிபொருள் விநியோகம் நேற்று இடம்பெறாத நிலையில் நேற்று மாலை ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளாக காத்திருந்த மக்கள் எரிபொருள் வழங்கப்படாத நிலையில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.