திருகோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
“ பாதுகாப்புக்கான நிதி போருக்குப் பின்னரும் அதே அளவிலேயே ஒதுக்கப்படுகின்றது.
இந்த நிதி வடக்கு கிழக்கில் இந்துக் கோயில்களை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதற்கும், அங்கு பௌத்த விகாரைகளை கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
திருக்கோணேஸ்வரத்தில் சுற்றுலாத் தளத்தை உருவாக்கி மிகப்பெரிய பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் கோணேஸ்வரத்தின் புனிதத் தன்மையை இல்லாது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த ஆலயத்திற்கான 18 ஏக்கர் நிரப்பரப்பை அபகரிக்கும் நிலைமையும் உருவாகியுள்ளது.
இதனை உடனடியாக நிறுத்தி கோணேஸ்வரத்தை புனிதத் தலமாக பிரகடனப்படுத்த வேண்டும்.
அதே போன்று குருந்தூர் மலையிலும் ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டட நிர்மாணங்கள் இடம்பெறுகின்றன.
இவை தமிழ் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தப் போவதில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றார். புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
ஆனால் பல அமைப்புகள் மீதான தடைகள் இப்போதும் உள்ளன. கொள்கை ரீதியான விடயமாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.