காற்றாலைக்கு ஆதரவாக விநோதக் குழுவின் போராட்டம்; கூட்டி வந்தவர் ஓட்டம்
மன்னார் மாவட்டத்தில் காற்றாலைத் திட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி, இளைஞர்கள் அடங்கிய விநோத குழுவொன்று இன்று போராட்டத்தை நடத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பாரிய காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த திங்கட்கிழமை, மாவட்டம் முழுவதையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து இந்தத் திட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இன்றைய சம்பவம்
இந்தச் சூழலில், இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, மன்னார் மாவட்டத்தைச் சாராத சில இளைஞர்களை உள்ளடக்கிய குழுவொன்று திடீரெனத் திரண்டு, காற்றாலைத் திட்டம் வேண்டும் என ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டத்தின் முடிவில், அவர்கள் காற்றாலைத் திட்டம் தொடர்பான மகஜர் ஒன்றையும் மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர்.
பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்
போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சிலர் அக்குழுவினரிடம் கேள்விகளை எழுப்பினர். இதனால் அச்சமடைந்த சிலர் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடினர். தடுக்கப்பட்ட சில இளைஞர்களிடம் போராட்டம் குறித்து விசாரித்தபோது, அவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.
“ஒரு கூட்டம் நடைபெறுவதாகக் கூறி தங்களை மல்லாவியிலிருந்து அழைத்து வந்ததாகவும், பணம், உணவு மற்றும் ஏனைய செலவுகளைத் தாங்களே பார்த்துக்கொள்வதாகக் கூறி, இங்கே கொண்டு வந்து போராட்டத்தில் இறக்கிவிட்டனர்” என்று அந்த இளைஞர்கள் தெரிவித்தனர். மேலும், தங்களை அழைத்து வந்த நபர் தங்களைப் போகச் சொல்லிவிட்டு ஓடிச் சென்றுவிட்டதாகவும் போராட்டக்கார இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குழப்பம் விளைவிக்க முயற்சி
மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் காற்றாலைக்கு எதிரான போராட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்குடன் சம்பந்தப்பட்ட காற்றாலை நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த காற்றாலை நிறுவனம், கிராமங்களில் உள்ள இளைஞர் கழகங்களிடம் “உதவி செய்வதாக” கூறி கோரிக்கை கடிதங்களைப் பெற்று, அவற்றை காற்றாலைக்கு ஆதரவான கடிதங்களாகச் சமூக வலைதளங்களில் தற்போது பதிவிட்டு வருவதாகவும் உள்ளூர் இளைஞர் கழகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.





