புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதியினர் உட்பட மூவர் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் உள்ள யாருமற்ற வீடு ஒன்றில் நடத்தப்பட்ட திடீர்ச் சோதனையில், ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதியினர் உட்பட மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, 22 வயதுடைய இளம் கணவரிடம் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடம் இருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், அந்த வீட்டில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடம் இருந்து 9 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காகப் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளுக்குப் பின்னர் இவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





