விசுவமடுவில், இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு வலியுறுத்தியுள்ள அமெரிக்கா மற்றும் ஐ.நாவின் தூதுவர்கள், அத்தியாவசியப் பொருட்களுக்காக நீண்ட வரிசையில் பல மணி நேரங்களைச் செலவழிக்கும் விரக்தியைப் புரிந்து கொள்ளுமாறு, படையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விசுவமடு எரிபொருள் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுடன் இராணுவத்தினர் முரண்பட்டுக் கொண்டதுடன், அவர்களைத் தாக்கி, துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை அடுத்து இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஐ.நா தூதுவர்கள் ருவிட்டரில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,
“பெட்ரோல் வரிசைகள் மற்றும் மின்வெட்டுகள் அதிகரிக்கும் போது, இயற்கையாகவே பதற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
ஆனால் கொதிநிலை இலங்கையின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யாது.
இந்த கடினமான சூழ்நிலைகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.
அதிகளவு சக்தி பயன்படுத்தப்பட்டமை குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஐ.நாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டியும் இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“பெட்ரோல் வரிசையில் பொலிஸ் மற்றும் இராணுவம் சம்பந்தப்பட்ட வன்முறையின் படங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
நீண்ட வரிசையில் பல மணி நேரத்தை செலவழிக்கும் மக்களின் விரக்தியைப் புரிந்து கொள்ளவும், பலத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் பாதுகாப்பு படையினரை கேட்டுக்கொள்கிறேன்.
அதிகப்படியான சக்தி பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.