2025 -ல் என்ன நடக்கும்? முன்கூட்டியே புட்டு புட்டு வைத்த பாபா வங்கா கணிப்புகள்!
2025 ஆம் ஆண்டை ஆர்ப்பரிப்போடு எதிர்நோக்கி இருக்கும் அதே வேளையில் என்னவெல்லாம் நடக்கும் பாபா வங்கா என்ன கணித்துள்ளார் என கணிப்புகள் மீது நம்பிக்கை கொண்ட பலரும் ஆர்வத்தோடு தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஜோதிடர்கள், தீர்க்கதரிசிகள், நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் உலகில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து பல்வேறு கணிப்புகளை பல ஆண்டுகளாக வெளியிட்டு அதிர்ச்சியூட்டி வருகின்றனர். இவர்களில் ஒருவரான பல்கேரியாவைச் சேர்ந்த பாபா பங்கா (Baba Vanga) தனது பல கணிப்புகள் மூலம் உலகை ஆச்சரியப்படுத்தியவர்.
பாபா வங்காவின் பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டிய கணிப்பு
குறிப்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் மரணம், இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம் என முன்கூட்டியே கணித்தவர்தான் இந்த பாபா பங்கா என சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் விட தனது மரணத்தைக் கூட முன்கூட்டியே கணித்தவர் பாபா பங்கா என அவர் பற்றி சொல்லப்படும் தகவல்கள் எல்லாமே அமானுஷ்யங்கள் நிறைந்த ஆச்சரியங்களாகவே இருக்கின்றன.
அமெரிக்கா மீதான இரண்டு எக்கு பறவைகளின் தாக்குதல் என பாபா பங்கா முன்கூட்டியே கணித்திருக்கிறார். எக்கு பறவைகள் என்பது இரட்டை கோபுர தாக்குதலில் பயணிகளின் விமானம் மூலம் நடந்த தாக்குதலைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதுபோல அமெரிக்காவின் 44வது அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் வருவார் என கணித்தபடியே பராக் ஒபாமா அதிபரானார்.
பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு 85 வது வயதில் காலமானாலும் வரும் 5079 ஆம் ஆண்டு வரை என்னவெல்லாம் நடக்கப்போகிறது என முன்கூட்டியே கணித்து விட்டதாக கூறப்படுகிறது. அதாவது அடுத்த 3000 ஆண்டுகளுக்கு என்னவெல்லாம் நடக்கும் என இவர் கணித்து வைத்துள்ளாராம்.
அப்படிப்பட்ட பாபா வங்கா அடுத்த 2025ல் என்னவெல்லாம் நடக்கும் எனக் கூறியுள்ளார் அவர் கணித்தவற்றை தெரிந்து கொள்வதற்கு முன் யார் இந்த பாபாவங்கா என்று தெரிந்து கொள்ள ஆரம்பித்தால் கூடுதல் ஆச்சரியங்கள் தொற்றுக் கொள்கின்றன.
யார் இந்த பாபா வங்கா?
பல்கேரிய நாட்டின் பெலாசிகா பகுதியைச் சேர்ந்த இவர் 12 வயதாக இருக்கும்போது திடீரென கண் பார்வையை இழந்துள்ளார். அதே நேரத்தில்தான் உலகத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்துவிடும் அமனுஷ்ய சக்தியும் இவருக்கு கிடைத்தது என சொல்லப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் நூற்றாண்டுகள் என்ற புத்தகத்தின் மூலமாக எதிர்கால உலகத்தில் என்ன நடக்கப்போகிறது என ஏராளமான தகவல்களை குறிப்பிட்டிருப்பார்.
அதுபோல பாபா வங்காவும் வருங்காலத்தில் நடக்கப்போவதை புட்டுப்புட்டு வைப்பதால் பெண் நாஸ்ட்ரடாமஸ் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார் பாபா வங்கா. இதுவரை இவரது கணிப்புகள் 85% நிறைவேறி உள்ளது என சுட்டிக் காட்டுகிறார்கள் நிபுணர்கள்.
மேற்காசிய நாடான சிரியாவில் தற்போது ஆட்சியே கவிழ்ந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்கு போனதையும் பாபா வங்கா முன்கூட்டியே கணித்து விட்டாராம்.
சிரியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு மூன்றாம் உலகப்போர் தொடங்கப் போவதாகவும் ஏற்கனவே கூறியிருக்கிறார் பாபா வங்கா. இந்த ஆண்டு சர்வதேச நாடுகளின் கடன் உயரும் எனவும் அவர் கணித்துள்ளார் அது அப்படியே நடந்துள்ளது என நிபுணர்கள் ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள்.
இந்த ஆண்டில் உலக அளவில் மிகப்பெரிய இரண்டு போர்கள் நடக்கும் எனவும் கூறியுள்ளார். ஒரு பக்கம் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொற்றிக் கொண்டதோடு இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல ரஷ்யா உக்ரைன் போரும் இந்த ஆண்டு தீவிரமடைந்து வந்தது. அமெரிக்காவின் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டதிலும் பாபா பங்காவின் கணிப்பு உண்மையாக இருக்கிறது. மேலும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு மோசமான வானிலை உருவாகும் என கணித்தது போலவே உலகின் மிகப் வெப்பமான ஆண்டு என சுட்டிக்காட்டியுள்ளார்கள் ஆய்வாளர்கள்.
இப்படி ஒவ்வொன்றையும் முன்கூட்டியே கணித்த பாபா வங்கா 2025 ஆம் ஆண்டில் என்ன நடக்கப்போகிறது என்று கணித்திருக்கிறார் என ஆர்வத்தோடு தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
2025ல் ஐரோப்பாவில் எதிர்பார்க்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் போர்கள்
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் உலக அளவில் ஒரு மாபெரும் பேரழிவு நிகழப்போகிறது என்றும் ஐரோப்பாவில் ஒரு முக்கிய பிரச்சனை ஏற்பட போகிறது. 2025ல் இரு நாடுகளுக்கு இடையே ஒரு போர் உருவாகும் அது உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி கலக்கமடைய வைத்திருக்கிறது பாபா பங்காவின் கணிப்பு.
இதில் கிழக்கும் மேற்கும் மோதிக்கொள்ளும் கிழக்கில் தொடங்கும் போர் மேற்கை அழிக்கும் என கணித்திருக்கிறாராம் பாபா வங்கா. அதுமட்டுமல்ல 2025 ஆம் ஆண்டு ஐரோப்பா கண்டம் அழிவை சந்திக்கலாம், ஐரோப்பாவில் நடக்கும் போர் உலகப் பேரழிவாக விரிவடையும் என்றும் பாபா வங்காவின் கணிப்புகள் அதிர்ச்சி ஊட்டுகின்றன.
2025ல் புதுவித பேரழிவு தொடங்கலாம், வேற்று கிரகவாசிகளும் பூமிக்கு வரலாம், கம்ப்யூட்டர் செல்போன் வசதி இல்லாமல் டெலிபதி என்கிற எண்ணத் தொடர்புகள் மூலம் பேசிக் கொள்வார்கள் என்றெல்லாம் நம்ப முடியாத அளவிற்கு உள்ளன அவர் கணித்து வைத்திருப்பதாக கூறப்படும் தகவல்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி பாபா வங்காவின் முன்கூட்டிய கணிப்பு
இப்படி 2025 ஆம் ஆண்டு குறித்து ஏற்கனவே பல அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை பாபா வங்கா வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்தும் அவர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாபா வங்கா கணிப்பின்படி ட்ரம்ப் விரைவில் கடுமையான உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என கணித்ததாக கூறப்படுகிறது. இப்படி பாபா வங்கா கணித்ததாக பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அதே நேரத்தில் இந்த கணிப்புகளின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள் கணிப்புகள் மீது நம்பிக்கையற்றவர்கள்.