கோவிட் 19 தொற்று காரணமாக 4 மாத குழந்தையொன்று, பேரதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி நுகவெலவை சேர்ந்த அமோதய சந்தீப்ப கருணசிங்க என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தைக்கு நான்கு மாதத்தில் தடுப்பூசியொன்று கடந்த 12 ஆம் திகதி வைத்தியசாலையில் வழங்கப்பட்டது.
மறுநாள் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன், சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காலையில் அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிற்கு குழந்தையை தாயார் அழைத்து சென்றார்.
எனினும், குழந்தை குணமடையாததை அடுத்து , அன்று மதியம் பேரதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது கொரோனா தொற்று இல்லையென முடிவு வெளியானது.
எனினும், குழந்தைக்கு சுவாச சிக்கல் இருந்ததால் பிசிஆர் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே குழந்தை உயிரிழந்துள்ளது. பிசிஆர் முடிவில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குழந்தையின் தந்தை தற்போது இத்தாலியில் பணிபுரிகிறார். குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களின் முன்னர்தான் அவர் இத்தாலி சென்றிருந்த நிலையில் அவர் தனது குழந்தையின் முகத்தை ஒருமுறை கூட பார்க்கவில்லையென மரணவிசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களில் மேலதிக பிரேத பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை. எனினும், குழந்தையின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் அவ் அறிக்கை கிடைக்கும் வரை குழந்தையின் உடலை தகனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.