உரு மாறிய கொவிட் வைரஸ் தொற்றை அடையாளம் காண்பதற்கு போதியளவு வசதிகள் கிடையாது என்பதனை எவரும் கவனத்திற் கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுகூட நிபுணர்களின் கூட்டமைப்பு இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொவிட் வைரஸ் தொற்று கொழும்பு, வவுனியா, இங்கிரிய, மத்துகம, வத்தள மற்றும் பியகம போன்ற பகுதிகளில் பதிவான நோய்த் தொற்றாளிகள் சிலரில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த புதிய உரு மாற்றம் பெற்ற வைரஸ் தொற்றை அடையாளம் காணக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்ட கருவிகள் ஒன்று கூட சுகாதார அமைச்சிடம் கிடையாது என கூட்டமைப்பின் தலைவர் ரவீ குமுதேஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பதினெட்டு மையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இந்த நிலையங்களில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உருமாற்றம் பெற்ற வைரஸ் தொற்றை அடையாளம் காணும் பரிசோதனைகள் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்படுவதாகவும் அது கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவித்த போதிலும் உரிய பலன் கிடைக்கவில்லை என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.