ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று ஆரம்பமாகின்றது.
இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயார் செய்யப்பட்ட விசேட தீர்மானமும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் கனடா, பிரித்தானியா மொன்டிநீக்ரோ, மலாவி மற்றும் வட மெசிடோனியா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது..
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்தும் கொள்கையும், இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதிநிதிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள விடயங்களில் முதன்மையான விடயமாக காணப்படுகின்றன.
இதற்கிடையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பெச்சலட்டினால் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று முன்பாகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையினை நிராகரிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இம்முறை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 24 ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் பங்கேற்கின்றார்.
ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.