நாட்டில் கொரோனா தொற்று பரவலால் முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோதமிபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி, கோதமிபுர 24 மற்றும் 78ஆம் தோட்டங்கள், வேலுவன வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பூகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரிமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் கல்லொலுவ பகுதியின் ஜூம்மா மஸ்ஜிட் மாவத்தை, இத்ரா மாவத்தை, புதிய வீதி மற்றும் அகுரகொட ஆகிய பகுதிகளும் அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவின் பொலான தெற்குப் பகுதியும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.