அரச பணியாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு, சமுர்த்தி கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட, 229 பில்லியன் ரூபா பொருளாதார நிவாரணப் பொதியை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றிரவு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்ட ஒப்புதலுக்கு அமைய அவர் இந்த பொருளாதார நிவாரணப் பொதி தொடர்பான விபரங்களை அறிவித்துள்ளார்.
இதற்கமைய, அரச பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா சிறப்புக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக ஜனவரி மாதம் முதல் 1,000 ரூபா வழங்கப்படும். வீட்டுத்தோட்டங்களுக்கான ஊக்குவிப்புப் பொதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் 20 பேர்ச்சஸ் வரையிலான வீட்டுத்தோட்டங்களில் பயிர்களை வளர்ப்பதற்கு, 5000 ரூபாவும், 20 பேர்ச்சிலிருந்து ஒரு ஏக்கர் வரையிலான வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ரூபா 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவும், வழங்கப்படும்.” என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.