கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் பொதுமக்கள் பாவனைக்கு கையளிப்பு
Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு இன்று (08.04.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கையளிக்கப்பட்டது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, கொழும்பு மேயர் விராய் கெலி பல்தசார் மற்றும் விமானப்படைத் தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
பஸ் நிலையக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டதுடன், பயணிகளுக்காகப் புதிய தகவல் மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் புனரமைப்புப் பணிகளுக்காக இலங்கை விமானப்படை தனது தொழில்நுட்ப மற்றும் மனிதவளப் பங்களிப்பினை வழங்கியுள்ளது.
பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு, பயணிகள் சௌகரியமாக அமர்ந்து செல்வதற்கான வசதிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த நிலையம், தற்போது சர்வதேசத் தரத்திலான ஒரு பொதுப் போக்குவரத்து முனையமாக மாற்றப்பட்டுள்ளது.
அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபா செலவில் இந்தப் பஸ் நிலையத்தைப் புதுப்பித்துள்ள நிலையில், அதனைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பது பொதுமக்களின் தலையாய பொறுப்பு என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தாமல் பாதுகாப்பதன் மூலமே, நீண்ட காலத்திற்கு இவ்வாறான சிறந்த சேவைகளைப் பெற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.








