Welcome to Jettamil

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை!

Share

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை!

இலங்கையில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் (FPA) நிறைவேற்றுப் பணிப்பாளர் மருத்துவர் ருசித பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், எமது சங்கத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்கும் நடைமுறையைக் கடந்த ஆண்டே நாம் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்றார்.

இந்த வெற்றிகரமான நடைமுறையை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் நோக்கில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, தொழில் அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தங்களின் சங்கம் மூலம் உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதவிடாய் காலப்பகுதியில் பெண்களைப் பாராமரிப்பது என்பது வெறும் தனிநபர் சார்ந்த விடயமல்ல, அது ஒரு சமூகப் பொறுப்பு என்பதை வலியுறுத்திய மருத்துவர் ருசித பெரேரா, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை இந்த முயற்சியில் இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

உலகளவில் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான வரிகளை நீக்குதல் மற்றும் மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழலில், இலங்கையிலும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான (Sanitary Products) வரிகளை நீக்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத் திட்டமிடல் சங்கத்தின் இந்த உத்தியோகபூர்வ கோரிக்கை பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை