இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு பிரபல இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான ஆசிய இணைய கூட்டணி கவலை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டத்தை உருவாக்குவதில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்ததமை மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் புதுமையின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கேள்வி எழுவதாக அதன் நிர்வாக பணிப்பாளர் ஜெஃப் பெயின் தெரிவித்துள்ளார்.
இணைய பாதுகாப்பு சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை நசுக்கக்கூடியதும், இணையத்தில் தமது எண்ணங்கள், யோசனைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமைகளை குறைக்கக்கூடிய கொடூரமான அமைப்பாக காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தமது நிறுவனங்கள் இணைய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஜெஃப் பெயின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் ஒத்துப்போகும் ஒழுங்குமுறைகளை நிறுவுவதற்கு தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஆசிய இணைய கூட்டணி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.