இந்த ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகள் 2K Kids அல்ல, பீட்டா தலைமுறையினர் – வெளியாகிய தகவல்
2025 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு பீட்டா தலைமுறையினர் என பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை உலகம் பார்த்திராத பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அனுபவிக்க இருக்கும் இந்த தலைமுறை சந்திக்கப் போகும் சவால்களும் ஏராளம் உள்ளன.
1985 – 1994 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் பிறந்தவர்கள் 90ஸ் கிட்ஸ் என்றும் அதன் பிறகு பிறந்தவர்கள் 2k கிட்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கட்டாந்தரையில் ஓடியாடி விளையாடிய கடைசி தலைமுறையும் கம்ப்யூட்டர் இன்டர்நெட் செல்போன் போன்ற தொழில்நுட்பங்களை முதல் முறையாக பயன்படுத்தியதும் 90ஸ் கிப்ட்ஸ்கள் தான்.
அறிவியல் உலகில் ஒவ்வொரு 15 ஆண்டு இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளுக்கு பொது பெயரிட்டு அழைக்கப்படுவது வழக்கம். 1981 முதல் 1996 வரையிலான தலைமுறையை மில்லினியல் என்றும், 1996 முதல் 2010 வரையிலானவர்களை ஜென் இசட் என்றும், 2010 முதல் 2024 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் ஜெனரேஷன் ஆல்பா என்றும் அழைக்கப்படுகின்றனர்.
2025 முதல் பிறக்கும் குழந்தைகளின் புதிய தலைமுறை
இந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு முதல் 2039 ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணி வரை பிறக்கும் குழந்தைகள் பீட்டா தலைமுறையினர் என பெயரிடப்பட்டுள்ளது.
அபரிமிதமான AI வளர்ச்சி காரணமாக இந்த பீட்டா தலைமுறை குழந்தைகள் தங்களின் அன்றாட வாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப வசதிகளுடனேயே வளர்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சந்திக்கும் சவால்கள்
சிறிய வயதில் இருந்தே பீட்டா தலைமுறையின் உலகம் சூப்பர் கம்ப்யூட்டர்கள், தானியங்கி கார்கள், ரோபோட்டிக்ஸ் போன்றவற்றை கொண்டிருக்கும் என்றும் மருத்துவத்துறையின் வளர்ச்சி காரணமாக நீண்ட காலம் நோயற்ற வாழ்வை பெறுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம் இந்த அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் பின் விளைவுகளையும் பீட்டா தலைமுறையினர் சந்திக்க நேரிடும். இதேபோல் புவி வெப்பமயமாதல் இயற்கை பேரிடர்கள் சுற்றுச்சூழல் மாசு போன்ற இயற்கை சார்ந்த பிரச்சனைகளையும் மிக மிக அதிக அளவு சந்திக்க வேண்டி வரும்.
என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாலும் பீட்டா தலைமுறையினரால் இயற்கையான உணவு ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போகும் என்பது மிகப்பெரிய குறையாக இருப்பதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு நல்ல வாழ்வியல் முறை, நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி இதை இளம் தலைமுறை கட்டாயம் யோசிக்க வேண்டும். 2035 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் 16% பேர் ஜென் பீட்டா தலைமுறையாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இவர்கள் 22 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை உயிர் வாழும் வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.