நிலாவரை கிணற்றில் தூய்மிப்புப் பணி: சமூக வலைத்தள விமர்சனங்களுக்குப் பின் பிரதேச சபை அதிரடி!
வரலாற்றுப் புகழ்மிக்கதும், தமிழ் மக்களின் தொன்மையை பறைசாற்றுவதுமான நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதி அண்மைக்காலமாகத் தூய்மையற்று காணப்படுவதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவான தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காலம் காலமாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த நிலாவரை கிணற்றுப் பகுதி, தமிழர்களின் வரலாறு மற்றும் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் அழகுபடுத்தப்பட்டு வந்தது.
2021 முதல் 2023 வரையான காலப்பகுதியில், பௌத்த சிங்களப் பேரினவாத நோக்கில் விகாரை அமைக்கும் முயற்சியாக இராணுவத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் இங்கு பல தடவைகள் அத்திவாரம் வெட்டும் முயற்சிகளை மேற்கொண்டது.
அப்போதைய பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இந்த முயற்சிகளைத் தடுத்ததால், அரச கருமங்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டார். இவ்வாறான காரணங்களால், சபை பதவியிழந்த பின்னர் இந்தப் பகுதியில் செயற்பட முடியாமல் போனது.
முகாமைத்துவச் சிக்கல்களால், இந்தப் பகுதி கழிவுகளாலும் பற்றைகளாலும் நிறைந்து, மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு மோசமான நிலையில் காணப்பட்டது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் எழுந்த கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபை உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நேற்று புதன்கிழமை (07) இந்தப் பகுதியைக் துப்புரவு செய்தனர்.
உடைவடைந்த இருக்கைகள், நுழைவாயில் கதவு போன்றன திருத்தப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டன.
புதிய பெயர்ப் பலகைகளும், பொலித்தீன் தடை மற்றும் தூய்மையைப் பேணுவதற்கான விளம்பரப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





