பொதுமக்களை பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் இன்று காலை முதல் ஏற்பட்ட நீண்ட வரிசை காரணமாக பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தும். நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எரிபொருள் கொள்வனவுக்காக வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
யாழ் மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.ஆனாலும் யாழ் நகரின் மத்திய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், எரிபொருள் தீர்ந்து போனமையால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மாளிகாவத்தை மற்றும் பஞ்சிகாவத்தை வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.அதேபோல காலி-கொழும்பு பிரதான வீதி, தெஹிவளையில் தடைப்பட்டிருந்தது.எரிபொருள் போராட்டம் காரணமாக தெமட்டகொட பேஸ்லைன் வீதி தடைப்பட்டிருந்தது.
மாவத்தகம மற்றும் வெள்ளவத்தை வீதிகளில் எரிபொருள் வரிசைகள் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நாளாந்தம் ஒவ்வொரு பகுதியிலும் நீண்ட வரிசையில் எரிபொருள் கொள்வனவிற்கு மக்கள் காத்திருப்பதால் வீதித்தடைகள் ஏற்பட்டு மக்கள் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகின்றது.