அரசாங்கமும், இலங்கை மின்சார சபையும் வெளியிட்ட அறிவிப்புக்கு மாறாக, நேற்று இரவு நாட்டின் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
டொலர் நெருக்கடி காரணமாக, மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், அடுத்து வரும் நாட்களில், மின்சாரம் தடைப்படும் என்றும், இலங்கை மின்சார சபை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
தினமும், இரவில் தலா ஒரு மணிநேரம், நான்கு பிரிவுகளாக மின்தடை அமுல்படுத்தப்படும் என்று அட்டவணையும் வெளியிடப்பட்டது.
எனினும், மின்சாரத் தடை ஏற்படாது என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே கூறியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை மின்சார சபையும், நேற்று மின்தடை ஏற்படாது என்று அறிவித்திருந்தது.
அதேவேளை, நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர ரமேஷ் பத்திரன, அடுத்த பத்து நாட்களுக்கு மின் தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.
எனினும் மின்சார மின்சார சபை வெளியிட்ட அறிவிப்புக்கு அமைய நேற்று மின் தடை ஏற்படாது என்று பொதுமக்கள் கருதியிருந்த நிலையில், நேற்றிரவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று மாலை 5.55 மணி முதல் 7 மணி வரை மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக, மாணவர்களுக்கான இணையவழிக் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சாரம் துண்டிப்புக்கு காரணம் என்று இலங்கை மின்சார சபை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.