Welcome to Jettamil

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நள்ளிரவு தொடக்கம், நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவரது அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி, பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்களை தடுத்து வைப்பதற்கும் கைது செய்வதற்கும் ஆயுதப்படைகளுக்கு பரந்தளவு அதிகாரங்களை வழங்கும் அவசரகாலச் சட்டம், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவசரகாலச்சட்டத்தைப் பிரகடனம் செய்ய முடிவு செய்திருப்பதாக, அவரது ஊடகப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூக வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக அவசரகால விதிமுறைகள் தேவைப்படுவதாக அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து வரும் நிலையில், ஜனாதிபதிக்கும், அவரது அரசாங்கத்துக்கும் எதிரான மக்கள் போராட்டங்கள் தொடங்கிய பின்னர், அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்துவது இது இரண்டாவது தடவையாகும்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி அவசரகால விதிமுறைகளை அறிவித்த  ஜனாதிபதி, கடும் எதிர்ப்புகளை அடுத்து, ஐந்து நாட்களுக்குப் பின்னர், கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அந்தப் பிரகடனத்தை ரத்து செய்தார்.

ஜனாதிபதியின் அவசரகாலப் பிரகடனத்திற்கு அடுத்த 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதும், இல்லாவிட்டால் அந்தப் பிரகடனம் காலாவதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை