யாழ். மாநகர சபை எல்லை பகுதியில் உருத்திராட்சப் பழம் போன்ற போன்ற போலிப் பழம் விற்பனை செய்யப்படுவதாக தமிழ் தேசியப் பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிசாந்தன் தெரிவித்தார்.
நேற்றையதினம் புதன்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றறிந்த மக்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் சிங்களப் பகுதிகளில் காணப்படும் உருத்திராட்ச பழத்தை ஒத்த ஒரு வகைப் பழத்தினை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் யாழ். நகரப் பகுதிகளில் விற்பனை செய்கிறார்கள்.
இவ்வாறு விற்பனை செய்பவர்கள் ஒரு பழம் நூறு ரூபாவாகவும் உருத்திராட்ச மரம் என்று ஒரு மரத்தை ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்கிறார்கள்.
உண்மையான உருத்திராட்ச பழம் நேபாளம் மற்றும் இந்தியாவில் இருந்தே உற்பத்தி செய்யப்பட நிலையில் ஒரு மரக்கன்றை வேண்டுவதானால் பல ஆயிரம் ரூபாய்கள் செலவழிக்க வேண்டும்.
ஆனால் இலங்கையில் காடுகளில் வாழும் உருத்திராட்ச கொட்டை போன்ற உருவத்தை உடைய பழத்தினை ஏமாற்றி விற்பனை செய்பவர்கள் ஒரு நாளைக்கு பல இலட்சம் ரூபாய்க்களை வருமானமாக ஈட்டுகிறார்கள்.
இதில் என்ன வேடிக்கையான விடயம் என்றால் இலங்கையில் வேறு பாகங்களில் விற்பனை செய்யாமல் யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்திருப்பது ஏன்?
யாழ். மாநகர சபை பகுதிகளில் அதிகமாக குறித்த வியாபாரிகள் நடமாடுகின்ற நிலையில் மாநகர நிர்வாகம் போலி உருத்திராட்ச பழம் விற்பனை செய்வதை கண்டும் காணாமல் இருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
குறித்த விடையம் தொடர்பில் யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட சுகாதார பிரிவிடம் பொதுமக்களை ஏமாற்றி உருத்திராட்ச பழம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த போது தமக்கு முறையான முறைப்பாடு வரவில்லை என உத்தியோத்தர் ஒருவர் பதிலளித்தார்.
பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை மாநகர சபை ஆணையாளர் தொடர்ந்து அனுமதிப்பாராக இருந்தால் மாநகர சபைக்கு எதிராக நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.