குடும்பப் பெண் குத்திக் கொலை – பிள்ளைகள் கண் முன்னிலையில் கொடூரம்
அனுராதபுரம், கெக்கிராவை பகுதியில் வட்டிப் பணம் தொடர்பான தகராறில், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அவரது பிள்ளைகளின் கண் முன்னாலேயே உறவினர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த 46 வயதுடைய பெண், நேற்று மாலை தனது வீட்டில் பிள்ளைகளுடன் இருந்துள்ளார். இதன்போது அங்கு வந்த உறவினரான 42 வயது நபர், வட்டிப் பணம் தொடர்பாக அந்தப் பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அந்த நபர் தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது தந்தை கூலி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், கண் முன்னாலேயே தாய் கொல்லப்பட்டதைக் கண்டு பிள்ளைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தப்பியோடிய கொலையாளியைக் கைது செய்ய கெக்கிராவை காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.





