இன்று எரிபொருள் விலைத்திருத்தம்
மாதாந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில், எரிபொருள் விலையில் திருத்தம் இன்று நள்ளிரவு நடைபெற இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு போதிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என பல தரப்பினரிடையே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதிகபட்சமாக வறுமை நிலையை எதிர்கொண்டும், மண்ணெண்ணெய் அதிகமாக பயன்படுத்தப்படும் பகுதிகளில், விலை அதிகரிப்பது அந்த மக்களுக்கு பெரிய சுமையாக மாறியுள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, எரிபொருள் விலையை மிகக் குறைந்த அளவிற்கு குறைக்க முடியும் என்று கூறியிருந்தனர். ஆனால், மக்கள் எதிர்பார்த்த விலைக் குறைப்பு எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
இதன் பின்னணியில், இன்று நடைபெறவுள்ள விலைத்திருத்தம் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு உதவும் அல்லது அல்ல என்பதை பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கடந்த நவம்பர் 30-ம் தேதி, எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டபோது, டீசலின் விலை 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 286 ரூபா ஆகியது. ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாயால் குறைந்து 311 ரூபா ஆகியது.
சுப்பர் டீசல் லீற்றரின் விலை மாற்றமின்றி 313 ரூபா மற்றும் ஒக்டேன் 95 லீற்றர் பெட்ரோலின் விலை 371 ரூபா ஆக இருந்தது.
இலங்கை மண்ணெண்ணெய் லீற்றரின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 188 ரூபா ஆகியுள்ளது.