நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை இன்று ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக எரிபொருள் ஏற்றிச் செல்வதற்காக போதிய எண்ணிக்கையிலான எரிபொருள் தங்கி ஊர்திகள் வராததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் சுமார் 450 எரிபொருள் தங்கி ஊர்திகள் எரிபொருள் ஏற்றிச் செல்வதாகவும், நேற்று (17) 300க்கும் குறைவான எரிபொருள் தங்கி ஊர்திகளே எரிபொருள் போக்குவரத்துக்கு பங்களித்துள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, நாட்டிற்கு வந்துள்ள 37,500 மெற்றிக் தொன் பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் இன்று செலுத்தப்படவுள்ளன.