முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் முற்பணம்
எதிர்வரும் ரமழான் காலத்தை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்குப் பண்டிகை முற்பணம் வழங்குவதற்கும், அவர்களது மதக் கடமைகளுக்காக விசேட பணிநேரங்களை ஒதுக்குவதற்கும் பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
ரமழான் நோன்பு காலம் முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே, தகுதியுள்ள அனைத்து முஸ்லிம் அரச ஊழியர்களுக்கும் ‘பண்டிகை முற்பணம்’ வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ரமழான் நோன்பு காலம் பெப்ரவரி 19 முதல் மார்ச் 21 வரை இடம்பெறவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் முஸ்லிம் ஊழியர்கள் தமது மத அனுஷ்டானங்களில் ஈடுபட வசதியாகப் பணிநேரங்களைச் சீரமைக்கத் திணைக்களத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாத்திரம் விசேட விடுமுறைகள் அனுமதிக்கப்படும் எனச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட சுற்றறிக்கை, அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள் மற்றும் கூட்டுத்தாபனத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





