யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேரின் 52-ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (10.01.2026) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். முற்றவெளிப் பகுதியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவேந்தல் தூபியடியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில், உயிரிழந்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1974-ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10 வரை நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று, அப்போதைய காவல்துறையினரின் அத்துமீறிய நடவடிக்கையினால் ஏற்பட்ட கலவரத்தில் 9 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
52 ஆண்டுகள் கடந்தும், அந்தப் படுகொலைகளுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்துடன் தமிழ் மக்கள் இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.






