கனமழையால் கொழும்பில் கடும் வாகன நெரிசல்: பல வீதிகள் நீரில் மூழ்கின!
நாட்டில் தொடர்ச்சியாகப் பதிவாகி வரும் கனமழையின் காரணமாக, கொழும்பின் பல வீதிகளில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், கனமழையால் கொழும்பின் சில வீதிகள் மழை நீரால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு மத்தியில் வாகனச் சாரதிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இலங்கைக்குக் கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.





