மலையகத்தில் 2,000 குடும்பங்களுக்கு வீட்டுப் பத்திரங்கள் கையளிப்பு
இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் 10 ஆயிரம் வீடுகள் திட்டத்தின் நான்காவது கட்டமாக, மலையகத்தில் இன்று (அக்டோபர் 12) 2,000 பயனாளர் குடும்பங்களுக்கு வீட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரவளைப் பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமானது.
“வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை” என்ற கருப்பொருளின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த வீட்டுத் திட்டம், மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வீட்டுத் திட்டம் மலையகத் தொழிலாளர்களுக்கு ஒரு வீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டிற்குச் சேவை வழங்கும் மரியாதைக்குரிய குடிமகனாக அவர்கள் மாறுவதற்கான அடித்தளமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகளை வழங்குவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த வீடுகளைப் பெறுவதற்கான சரியான வழிமுறையின் அடிப்படையில் பயனாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





