இலங்கையில் தரையிறங்கிய இந்திய ‘A’ அணி! ஜூன் 09 முதல் முத்தரப்பு தொடர் அதிரடி ஆரம்பம்
ஆசிய கிரிக்கெட் அரங்கின் அடுத்தகட்ட ஜாம்பவான்களைத் தீர்மானிக்கும் முக்கிய முத்தரப்பு ‘A’ அணி கிரிக்கெட் தொடர் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
இதற்காகத் திலக் வர்மா தலைமையிலான இந்திய ‘A’ அணி வீரர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில், வரும் ஜூன் 9-ஆம் தேதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ‘A’ அணி, இலங்கை ‘A’ அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது.
இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் படோனி, பிரப்சிம்ரன் சிங் மற்றும் அனுகுல் ராய் போன்ற அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளதால் இத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணி தரப்பில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் இளம் இடதுகை துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷி மீதே திரும்பியுள்ளது.
அண்மையில் நிறைவடைந்த ஐ.பி.எல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ‘சிறந்த துடுப்பாட்ட வீரர்’ விருதை வென்று, ரசிகர்களால் “பேபி பொஸ்” என உச்சிமுகரப்படும் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கையின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மறுபுறம் ஆப்கானிஸ்தான் ‘A’ அணியும் இத்தொடரில் பங்கேற்பதால், இறுதிப் போட்டிக்கு முன்னேற மூன்று அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.




