வரி செலுத்தாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் வருமான வரி செலுத்த வேண்டிய கடப்பாடு இருந்தும், அதனைத் திட்டமிட்டுத் தவிர்ப்பவர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தற்பொழுது அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது!
கடந்த ஜூன் 3ஆம் தேதி (2026) அன்று நடைமுறைக்கு வந்த புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ், உரிய கால அவகாசத்திற்குள் வரியைச் செலுத்தாதவர்கள் அல்லது வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக நேரடியாக வழக்குத் தொடரத் திணைக்களத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்யத் தவறுவதும், வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுவதும் இனி பெரும் குற்றமாகக் கருதப்படும்.
இந்த புதிய விதிமுறைகளின்படி, சட்டத்திற்கு இணங்காத வரி செலுத்துபவர்களுக்கு முதலில் திணைக்களத்தால் முறையான அறிவித்தல் ஒன்று வழங்கப்படும். அந்த அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து, தங்களது வரி குறைபாடுகளைச் சரிசெய்வதற்கு அவர்களுக்குச் சரியாக 30 நாட்கள் கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும்.
வழங்கப்பட்ட இந்த 30 நாட்களுக்குள்ளும் வரியைச் செலுத்தத் தவறினால், அது கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் சுருக்க விசாரணைக்கு உட்படுத்தப்படும். நீதிமன்ற விசாரணையின் பின்னர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு, 4 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாத காலச் சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனினும் நேர்மையாக ஒத்துழைப்பு வழங்கும் சாதாரண குடிமக்களை இந்தச் சட்டம் எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.





