இந்து சமுத்திரத்தை நெருங்கும் கொடூர எல்நினோ! அக்டோபர் வரை நீடிக்கப்போகும் கடும் வறட்சி!
மத்திய பசுபிக் பிராந்தியத்தில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்குள் ஊடுருவியுள்ள ‘எல்நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இலங்கையில் இம்மாதம் ஜூலை முதல் அக்டோபர் வரை மிகக் கடுமையான வெப்பத் தாக்கம் நிலவக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலைப்பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்!
மன்னாரில் நடைபெற்ற விசேட செயலமர்வில் பேசிய அவர், இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண கடல் வெப்ப ஏற்றம் காரணமாக இலங்கை மற்றும் மாலைதீவுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீர்த்தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலத்தை விட 16 மடங்கு அதிவேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதால், கடல் வெப்ப அலையின் தாக்கம் மிக வேகமாக இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
இந்த எல்நினோ தாக்கமானது ஜூலை முதல் செப்டம்பர் வரை உச்சக்கட்ட வறட்சியை ஏற்படுத்திவிட்டு, பின்னர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திடீரெனப் பாரிய மழைவீழ்ச்சியையும், புயல் தாழமுக்கங்களையும் தோற்றுவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களுக்குக் கடுமையான வறட்சியும் வெப்பமும் நீடிக்கவுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் இப்போதிலிருந்தே நீர் முகாமைத்துவத்தை மிகச் சரியாகப் பின்பற்றி, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண விவசாய மற்றும் கடற்தொழில் துறை அதிகாரிகளின் முன்னிலையில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!




