வடக்கு மாகாணத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு இடங்களில் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியாவும், சீனாவும் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் மற்றும், கௌதாரிமுனையில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டம் ஆகியவற்றை முன்னெனடுப்பதிலேயே போட்டி எழுந்துள்ளது.
அண்மையில் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீனத் தூதுவர் கீ சென்ஹோங், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தைப் பார்வையிட்டதுடன், ட்ரோன் கருவி மூலம் அந்தப் பிரதேசத்தையும் படம் பிடித்திருந்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், பருத்தித்துறை அபிவிருத்தி திட்டம் 2019 ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட போதும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அது நிறுத்தப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாகவும், மீண்டும் அதனை ஆரம்பிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க இணங்கியுள்ளதாகவும், இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பல முதலீட்டாளர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கே முன்னுரிமைக்குரிய தெரிவாக இருக்கும் எனவும், பிராந்திய ரீதியாக இந்தியாவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அதேவேளை, கௌதாரிமுனையில் காற்றாலை மின் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய முதலீட்டாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் பகுதியில் சீன நிறுவனம் ஒன்று கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளது.
இந்த இடத்தில் முதலீடு செய்வதற்கு சீனாவும் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.