இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அன்றைய தினம் குறித்த பிரிவில் கடமையாற்றிய சுமார் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
50 இலட்சம் ரூபா பணக் கட்டு ஒன்று காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கியின் சட்ட வைத்திய நிதி திணைக்கள அத்தியட்சகர் ஏ.ஆர். தயானந்தா நேற்று முன்தினம் (11) முறைப்பாடு செய்திருந்தார்.
மத்திய வங்கி கட்டடத்தின் அதியுயர் பாதுகாப்பு பகுதியில் புதிய தொழில்நுட்ப பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது மாடியில் உள்ள அலமாரியில் இருந்து இந்த பணக் கட்டு மாயமாகியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் ஆயிரம், 5000 ரூபாய் நாணயத் தாள் 8,000 பணக் கட்டுக்கள் இருந்துள்ள நிலையில், சம்பவத்தன்று, வங்கியில் இருந்து சுமார் 25 ஆயிரம் பில்லியன் ரூபாய் வெளிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பணக் கட்டு தவறுதலாக வேறு அலமாரிக்கு சென்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், எனினும் குற்றம் நடந்துள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.