ஈரானின் பிரம்மாண்ட பாலம் தகர்ப்பு! ட்ரம்ப் பகிர்ந்த பரபரப்பு வீடியோ
ஈரானின் கராஜ் நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய பாலங்களில் ஒன்று, நடத்தப்பட்ட சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதலில் முற்றாகத் தகர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பரபரப்பான வீடியோ காட்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பாலம் தீப்பற்றி எரிந்து பாரிய புகை மூட்டத்துடன் சிதறி விழுவது தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தங்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்திருந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்தப் பதிவு இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டுவது போல் அமைந்துள்ளது.
“ஈரானின் மிகப்பெரிய பாலம் சிதறிவிட்டது, இனி இதனை ஒருபோதும் பயன்படுத்த முடியாது; இன்னும் பல நடவடிக்கைகள் தொடரும்” என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். மேலும், ஈரான் ஒரு பெரிய நாடாக எஞ்சியிருக்க வேண்டுமானால், தாமதமாவதற்கு முன் உடன்படிக்கைக்கு வர வேண்டும் என அவர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கராஜ் நகரில் உள்ள இந்தப் பாலம் ஈரானின் போக்குவரத்து மற்றும் இராணுவ நகர்வுகளுக்கு மிக முக்கியமானது என்பதால், இதன் அழிவு அந்த நாட்டுக்குப் பாரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.





