தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு நாட்டுக்கு நன்மை தராது – சிறீ ரங்கேஸ்வரன்
தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிக்கும் தென்னிலங்கை, அரசியல்வாதிகள் பொறுப்பற்ற பேச்சுக்களால் மீண்டும் இனங்களுக்கிடையே விரிசலும் நாட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்ல வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜன நாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் இத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (16.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரத்தை 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைத்து மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை நிக்கவுள்ளதாக பிரித்துரு ஹெல உறுமியவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதயம் கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இது அரசினுடைய கருத்தல்ல. தேசிய கொள்கையும் அல்ல. ஒரு தனிப்பட்ட கட்சியினுடைய கருத்தாக இருக்கலாம். ஆயினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக கிடைக்கப்பபெற்ற 13 ஆவது அரசியலமைப்பின் திருத்தத்தினூடான மாகாண சபை முறைமையை இவ்வாறு எற்கனவே பலவீனப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இனிமேலும் இவ்வாறு மேற்கொள்ள முயற்சிக்கப்படலாம்.
இதுபோன்று ஏற்கனவே இவ்வாறு பலவினப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சி ஒன்றின்போது சந்திரிகா அம்மையாருடைய ஆட்சிக்காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்ளின் 50 இற்கும் மேற்பட்ட கையொப்பங்களை பெற்று சபையில் சமர்ப்பித்து அதனை முறியடித்திருந்தார்.
ஆனாலும் தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கத்தின் மூலம் இதை தடைதாண்டுவோம். அதற்கு நல்லிணக்கம் ஒருபுறமும் அரசியல் பிரதிநிதித்துவப் பலமும் இந்த இடத்தில் தேவைப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டகின்றோம்..
மேலும் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகமான அல்லது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை மெலின்படுத்தும் இவ்வாறான பேச்சுக்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதேநேரம் மாகாணசபைகளுக்கு இருந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இன்றைய எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசா தனது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் கீழ் கொண்டுவந்திருந்தார் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.