யாழ்ப்பாண நகரில், மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்ட இளைஞன் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிலரே இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
உடுவில் – செபமாலை கோயிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது 23) என்பவரே உயிரிழந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஊடகப் பயிலுநர் நண்பருடன் எரிபொருள் நிரப்ப குறித்த இளைஞன சென்றபோது, இடையில் புகுந்து எரிபொருள் நிரப்ப முற்பட்டவர்களை அவரது நண்பன் காணொளி பதிவு செய்துள்ளார்.
காணொளிப் பதிவைத் தடுக்க எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஊடகப் பயிலுநரின் கையை முறிக்கியுள்ளார்.
அப்போது நியாயம் கேட்க முற்பட்ட இளைஞனை எரிபொருள் நிலையத்தில் உள்ள மூவர் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து, இளைஞனுக்கு வாய், மூக்கு வழியாக இரத்தம் வடிந்துள்ளது.
வீடு சென்ற இளைஞன் மறுநாள் மதியம் நெஞ்சுவலி மற்றும் உடல் சோர்வடைய யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.