Welcome to Jettamil

அரச, தனியார் பேருந்து சேவையின் எதிர்காலம் குறித்து யாழ். எம்.பிகள் கூட்டாக ஆராய்வு!

Share

அரச, தனியார் பேருந்து சேவையின் எதிர்காலம் குறித்து யாழ். எம்.பிகள் கூட்டாக ஆராய்வு!

யாழ்.மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை ஆராயும் முகமாகவும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரது பிரசன்னத்துடன் கள விஜயம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிவகரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், யாழ். மாநகர மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளகர்கள், துறைசார் அதிகாரிகள், தனியார் போக்குவரத்து சேவையின் தலைவர், அரச போக்குவரத்து சபையின் அதிகாரிகள் என பெரும் உயர் அதிகாரிகள் குழுவே குறித்த கள விஜயத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விஜயத்தின்போது நெடுந்தூர சேவை பேருந்து நிலையம், இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் குறித்த இரு பேருந்து நிலையங்களின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடி இருக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

குறிப்பாக தூர சேவை பேருந்து நிலையத்தில் இருந்து இரு பேருந்து சேவைகளையும் இணைந்த சேவை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுப்பதில் இருக்கின்ற பிரச்சினைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் விரைவில் அதை நடைமுறைப்படுத்துவதற்காக பொறிமுறை விரைவில் உயர் மட்டக் கலந்துரையாடலின் ஊடாக எட்டப்படும் என்றும் குறித்த பேருந்து நிலையத்தின் பாதுகாப்புக் கருதி CCTV கமராக்கள் பொருத்தல் மற்றும் இருக்கின்ற மலசல கூடங்களுடன் மேலும் சில மலசல கூடங்களை கட்டமைத்தல் உள்ளிட்ட விடையங்களை ஏற்பாடு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருக்கின்ற தூய்மையாக்கல் பிரச்சினைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டதுடன் அவ்வாறு தேங்கி கிடக்கும் குப்பைகள் பிளாஸ்ரிக் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பேருந்து நிலையத்தில் இருக்கின்ற சிறு கடைகளால் ஏற்படும் அசௌகரியங்கள் நேரில் அவதானிக்கப்பட்டதுடன் அவற்றை அகற்றுவது தொடர்பிலும் அகற்றப்பட்ட பின்னர் பாதிக்கப்படும் வியாபாரிககுக்கு பரிகாரம் வழங்குவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை