Monday, Jan 13, 2025

காரைநகர் குடிநீர் பிரச்சினை – காரைநகர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு

By Jet Tamil

குடிநீரை பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இன்றையதினம் எவரடி குடிநீர் விநியோக நிறுவனத்தினர் மற்றும் காரைநகர் பிரதேச மக்கள் இணைந்து, காரைநகர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

இது குறித்து எவரடி நிறுவனத்தின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் 2015ஆம் ஆண்டில் இருந்து 1200 குடும்பங்களுக்கு, அதாவது நாள் ஒன்றுக்கு 150 குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றோம். இந்த பிரதேச சபையானது கடந்த 7 அல்லது 8 வருடங்களாக தண்ணீர் வழங்கவில்லை. அவர்களுக்கு என்று ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் அவர்கள் இயங்குகின்றனர்.

2018ஆம் ஆண்டுக்கு பின்னர் சில அரசியல்வாதிகளால் ஏற்பட்ட இடையூறு காரணமாக 2019ஏப்ரல் மாதத்தில், மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட எனது சொந்த காணியில் உள்ள விளான் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் காரணத்திற்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

குடிநீரை வழங்குவதற்கான அத்தனை சுகாதார வசதியும் நாங்கள் செய்துள்ளோம். இது குறித்து ஆளுநருக்கும் கடிதம் வழங்கியுள்ளோம்.

இந்நிலையில் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம். அவர் அரசாங்க அதிபரிடம் இது குறித்து பேசுவதாகவும், எம்மை பிரதேச சபையுடன் பேசி இணக்கத்திற்கு வருமாறும் கூறினார்.

எமக்கு தீர்வினை வழங்குமாறு கோரி கடந்த மூன்று நாட்களாக எமது குடிநீர் பவுசர்களை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து நிறுத்தியிருந்தோம். ஆனால் அதற்கு பிரதேச செயலகம் எந்தவிதமான பின்னூட்டலையும் காட்டவில்லை.

காரைநகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ளார். காரைநகர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலர் ஒரு தகுதி அற்றவர். நாங்கள் ஒரு திறமையான பிரதேச செயலரை எதிர்பார்த்து நிற்கின்றோம் – என்றார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றோம். இந்நிலையில் இன்றையதினம் மகஜர் கொடுப்பதற்கு பிரதேச செயலகத்திற்கு வந்தோம். உதவி பிரதேச செயலர் நீண்ட நேரம் காரணம் எதுவும் இல்லாமல் எங்களை காக்க வைத்துள்ளார்.

எமக்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதியை பெறுவதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

மகஜர் கையளிக்கும் போதும் கலந்துரையாடலின் போதும் ஊடகவியலாளர்கள் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு காரைநகர் உதவிப் பிரதேச செயலர் கடுமையான தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=L4smCn-kIBk
https://www.youtube.com/watch?v=kkA8Z6tetfc
Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு