மதிலை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்த லொறி; மட்டக்களப்பில் நள்ளிரவில் விபத்து
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக லொறி ஒன்று வீடொன்றின் மதிலை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்துள்ளது.
மருதமுனை வெதுப்பகம் ஒன்றுக்குச் சொந்தமான குறித்த லொறி, குருநாகலில் இருந்து மருதமுனை நோக்கி கல்முனைச் சாலை வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தது.
செட்டிபாளையம் பிரதான வீதியில் பயணித்தபோது, மழையுடனான வானிலைக்கு மத்தியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலைத் தாண்டி வளவுக்குள் சென்று தஞ்சம் புகுந்துள்ளது.
வீட்டின் மதில் மற்றும் சில வீட்டு உடமைகளுக்குச் சேதமேற்பட்டுள்ளது. லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்துச் சம்பவித்த சமயம் வாகனத்தில் மருதமுனையைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளனர். தெய்வாதீனமாக அவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










