Welcome to Jettamil

வீதிகளில் பலவந்தமாக உணவு பறிக்கும் யானைகள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

வீதிகளில் பலவந்தமாக உணவு பறிக்கும் யானைகள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புத்தளம் – கதிர்காமம் பிரதான வீதியில், யானைகள் உட்பட பல காட்டு விலங்குகள், வீதியில் செல்லும் வாகனங்களிடமிருந்து உணவைப் பெறும் நோக்கத்துடன் சாலையை அண்மித்து வருகின்றன. உணவு கிடைக்காத சமயங்களில், யானைகள் பலவந்தமாக உணவைப் பறிக்க முயற்சிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வெளியாகின்றன.

இந்நிலையில் புத்தள – கதிர்காமம் வீதியில் வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதற்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து யால – கல்யே வலய உதவி அதிகாரி தமீத் சந்தன மஹானாம அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இன்று முதல், வனவிலங்குகளுக்கு உணவு வழங்குபவர்கள், வீதியில் தேவையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்துபவர்கள், மற்றும் வீதியோரங்களில் குப்பைகளை வீசுபவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டம் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வீதியின் ஆரம்ப மற்றும் நிறைவுப் பகுதிகளான செல்லக் கதிர்காமம் மற்றும் கோனகங்கார ஆகிய பிரதேசங்களில், வீதியில் பயணிக்கையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வீதியில் எக்காரணம் கொண்டும் குப்பைகளை வீச வேண்டாம், வாகனங்களை நிறுத்த வேண்டாம், வனவிலங்குகளுக்கு உணவு வழங்க வேண்டாம் என பயணிகள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பலர் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததாலேயே இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்தன. எனவே, இன்றிலிருந்து, வனஜீவராசிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகளைப் பயன்படுத்தி, இந்தத் தவறுகளைச் செய்யும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது இலங்கையின் மிக பிரதான சாலைகளில் ஒன்றாகும். இதில் பயணிப்பதற்கு யாரும் அஞ்சத் தேவையில்லை. பாதுகாப்பிற்கு முழுமையான உத்தரவாதம் உள்ளது. வனவிலங்குகள் அவற்றின் போக்கில் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. அவற்றை அண்மித்து வாகனங்களை நிறுத்தி, உணவு வழங்க முற்படும்போதே இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை