ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்தது.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம் மரிக்கார், ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது, மின்சார கட்டணத்தை குறை, பெறுமதி சேர் வரியை குறை, அரசாங்கத்தை விரட்டியடிப்போம் உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.