பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடும் புதிய திட்டம் இன்று முதல் அமுல்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்குடன், வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று (நவம்பர் 1) முதல் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
அமுலுக்கு வந்தது: நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2456/41 இற்கமையவே இந்தக் கட்டண அறவீடு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
நடுத்தர அளவிலான கைப்பிடி பை: ரூபா 3
பெரிய கைப்பிடி பை: ரூபா 5
கீல்ஸ், காகில்ஸ் புட் சிட்டி, லாப்ஸ் சூப்பர், ஸ்பார் மற்றும் குளோமார்க் உள்ளிட்ட முன்னணி வர்த்தக நிலையங்கள் இணைந்து இந்தக் கட்டண அறவீட்டை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
பொலித்தீன் பை பாவனைகளை மக்கள் மத்தியில் குறைப்பதே இதன் நோக்கமாகும். இதன்மூலம், பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள் தமக்கான பைகளை வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். அறவிடப்படவுள்ள தொகையை வர்த்தக நிலையங்களில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





