யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் மறைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) நூலகக் கூரைத் திருத்த வேலைகளின் போது மீட்கப்பட்ட T56 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் சுமார் 20 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நூலகத்தின் கூரைத் திருத்த வேலைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (ஒக்டோபர் 30) முன்னெடுக்கப்பட்டபோது, முதலில் இரண்டு மகஸின்கள் அடையாளம் காணப்பட்டன.
அதைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 31) காவல்துறை மற்றும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலில் T – 56 ரக துப்பாக்கி ஒன்று, 4 மகஸின்கள், 3 சிறிய குண்டுகள், கிளைமோரை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், நீண்ட வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்துப் பொருட்கள், சேலைன் போத்தல், பஞ்சு, பன்டேஜ், இரத்தக்கறையுடன் கூடிய சாரம் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டன:
மீட்கப்பட்ட துப்பாக்கி மகஸின்கள் சுற்றப்பட்டு இருந்த பத்திரிகை மற்றும் சேலைன் போத்தலின் காலாவதி திகதி ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆயுதங்கள் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் நூலகக் கூரைக்குள் வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அனைத்தும் கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை (நவம்பர் 1) இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










